குலதெய்வமும், இஷ்ட தெய்வமும்.!

💥 தெய்வ வழிபாடுகளில் குலதெய்வ வழிபாடு, இஷ்ட தெய்வ வழிபாடு என இரண்டு வழிபாட்டு முறைகள் உண்டு. குல தெய்வ வழிபாடு என்பது அவரவர்களுடைய முன்னோர்கள் பல தலைமுறைகளாய் வழிபட்டு வந்த தெய்வம் குல தெய்வம் எனப்படும். இஷ்ட தெய்வ வழிபாடு என்பது அவரவர் தனிப்பட்ட முறையில் விரும்பி வழிபடும் தெய்வம் இஷ்ட தெய்வம் எனப்படும்.

💥 குலம் என்றால் குடும்ப பாரம்பரியம் என்று பொருள். நமது குடும்பத்திற்கென்று ஒரு வழிபாட்டு தெய்வத்தினை நமது முன்னோர்கள் வைத்திருக்கிறார்கள். தனது அடுத்த சந்ததியினர் நன்றாக இருக்க வேண்டும் என்பதே குலதெய்வ வழிபாட்டின் முக்கியக் குறிக்கோளாகும்.

💥 இன்றைக்குப் பலரும் பல தெய்வங்களை இஷ்ட தெய்வங்களாக வழிபடுகின்றனர். ஆனால் முதலில் விநாயகர் வழிபாடு, குலதெய்வ வழிபாடு செய்த பிறகே இஷ்ட தெய்வ வழிபாடு செய்ய வேண்டும் என்று நெறிமுறைகளை நம் முன்னோர்கள் வகுத்துச் சென்றுள்ளனர். அதன்படியே ஒவ்வொருவரும் இஷ்ட தெய்வத்தை உரிய வழிபாட்டு முறைகளுடன் வழிபடவேண்டும். இஷ்ட தெய்வ வழிபாடு என்பது, ஒரு வேண்டுதலுக்காக ஒரு குறிப்பிட்ட தெய்வத்தை வழிபட்டு வருவது. ஆனால், குல தெய்வ வழிபாடு என்பது மிக முக்கியமானது.

குல தெய்வ வழிபாடு ஏன் அவசியம் ? 💥 ஒருவர் அனுபவிக்கும் எல்லா பலன்களும் நாமும் நம் முன்னோர்களும் செய்த புண்ணியத்தின் அடிப்படையிலேயே கிடைக்கிறது. ஜாதகத்தில் உள்ள எல்லா தோஷங்களையும் பித்ரு பு+ர்வபுண்ணிய ஸ்தானத்தின் காவல் தெய்வங்களான உங்கள் குல தெய்வம் தீர்க்கும்.

💥 ஒருவரின் சந்தோஷமான சுபிட்சமான வாழ்க்கைக்கு குல தெய்வ ஆராதனையும், பித்ருக்களின் ஆசியும் மிக முக்கியம். குல தெய்வத்தை யார் ஒருவர் விடாமல் தொடர்ந்து வழிபாடு செய்கிறார்களோ, அவர்கள் வேண்டும் வரம் எல்லாம் கிடைக்கும்.

💥 ஒருவர் எவ்வளவு பூஜைகள் செய்தாலும் எத்தனை பரிகாரங்கள் செய்தாலும் குலதெய்வ அனுக்கிரகம் இல்லை என்றால், எந்த தெய்வ அனுக்கிரகமும் இல்லை என்றும், குல தெய்வ வழிபாடு கோடி தெய்வ வழிபாடு என்றும் சொல்லப்படுகிறது.

💥 பல தெய்வங்களை வழிபாடு செய்து வரலாம். ஆனால் அந்த தெய்வங்கள், குலதெய்வங்கள் ஆகாது. அவை இஷ்ட தெய்வங்கள் அல்லது இஷ்ட தேவதைகள் எனப்படும். இஷ்ட தெய்வமும் குலதெய்வத்திற்கு அடுத்ததுதான். மற்ற தெய்வங்களும் குலதெய்வத்தின் அனுமதி பெற்றே அருளினை வழங்க முடியும்.

💥 உங்கள் குல தெய்வத்தின் கோவிலுக்கு அடிக்கடி இயன்றபோது செல்லுங்கள். அடிக்கடி செல்ல முடியாதவர்கள் உங்கள் வீட்டிலேயே குல தெய்வபடத்தை அலங்கரித்து, பாரம்பரிய, வழக்கமான படையலை வைத்து மனம் உருக வழிபாடு செய்யலாம்.

💥 பெண்கள் மட்டும் இரண்டு குலதெய்வங்களை வணங்குகிறார்கள். திருமணத்திற்கு முன் பிறந்த வீட்டின் குலதெய்வத்தை வணங்குபவர்கள் மற்றும் திருமணம் முடிந்தவுடன் கணவரின் வீட்டில் உள்ள குலதெய்வத்தை வணங்க ஆரம்பிக்கிறார்கள். பிறகு பிறந்த வீட்டின் குலதெய்வத்தை வணங்குவது கிடையாது. ஆனால் பிறந்த வீட்டின் குலதெய்வத்திற்கு வருடத்திற்கு ஒரு முறை வழிபாடு செய்து வந்தால் புகுந்த வீட்டில் எந்த பிரச்சனையையும் சமாளிக்ககூடிய ஆற்றல் கிடைக்கும்.

இஷ்ட தெய்வமும், குலதெய்வமும் : 💥 நாம் வணங்கும் இஷ்ட தெய்வம் சக்தி வாய்ந்த தெய்வமாக இருந்தாலும், முதலில் குலதெய்வத்தையே வணங்க வேண்டும். ஒரு வேலை அந்த குடும்பத்திற்கு குலதெய்வ தோஷம் இருந்தால், மற்ற தெய்வங்களின் அருள் கிடைப்பதில்லை.

💥 குலதெய்வத்தின் அனுக்கிரகம் இல்லை என்றால் ஒருவர் என்னதான் சக்தி வாய்ந்த ஹோமம், யாகம் செய்தாலும், ஆலயங்களுக்கு சென்றாலும் எதிர்பார்த்த பலன் கிடைக்காது. குலதெய்வத்தின் ஆசி இல்லையென்றால் முன்னேற்றத்தில் பல தடைகள் ஏற்படும்.

💥 குலதெய்வ வழிபாடு ஒவ்வொரு குடும்பத்துக்கும் அவசியமானதாகும். வருடம் ஒருமுறையாவது குடும்பத்தோடு சென்று குலதெய்வத்துக்குச் செய்யவேண்டியதைச் செய்து வழிபட்டால் குலம் தழைத்து, வரும் சந்ததியினர் சந்தோஷமான வாழ்க்கையை வாழ்வர்.