குலதெய்வமும், இஷ்ட தெய்வமும்.!

💥 தெய்வ வழிபாடுகளில் குலதெய்வ வழிபாடு, இஷ்ட தெய்வ வழிபாடு என இரண்டு வழிபாட்டு முறைகள் உண்டு. குல தெய்வ வழிபாடு என்பது அவரவர்களுடைய முன்னோர்கள் பல தலைமுறைகளாய் வழிபட்டு வந்த தெய்வம் குல தெய்வம் எனப்படும். இஷ்ட தெய்வ வழிபாடு என்பது அவரவர் தனிப்பட்ட முறையில் விரும்பி வழிபடும் தெய்வம் இஷ்ட தெய்வம் எனப்படும்.

💥 குலம் என்றால் குடும்ப பாரம்பரியம் என்று பொருள். நமது குடும்பத்திற்கென்று ஒரு வழிபாட்டு தெய்வத்தினை நமது முன்னோர்கள் வைத்திருக்கிறார்கள். தனது அடுத்த சந்ததியினர் நன்றாக இருக்க வேண்டும் என்பதே குலதெய்வ வழிபாட்டின் முக்கியக் குறிக்கோளாகும்.

💥 இன்றைக்குப் பலரும் பல தெய்வங்களை இஷ்ட தெய்வங்களாக வழிபடுகின்றனர். ஆனால் முதலில் விநாயகர் வழிபாடு, குலதெய்வ வழிபாடு செய்த பிறகே இஷ்ட தெய்வ வழிபாடு செய்ய வேண்டும் என்று நெறிமுறைகளை நம் முன்னோர்கள் வகுத்துச் சென்றுள்ளனர். அதன்படியே ஒவ்வொருவரும் இஷ்ட தெய்வத்தை உரிய வழிபாட்டு முறைகளுடன் வழிபடவேண்டும். இஷ்ட தெய்வ வழிபாடு என்பது, ஒரு வேண்டுதலுக்காக ஒரு குறிப்பிட்ட தெய்வத்தை வழிபட்டு வருவது. ஆனால், குல தெய்வ வழிபாடு என்பது மிக முக்கியமானது.

குல தெய்வ வழிபாடு ஏன் அவசியம் ? 💥 ஒருவர் அனுபவிக்கும் எல்லா பலன்களும் நாமும் நம் முன்னோர்களும் செய்த புண்ணியத்தின் அடிப்படையிலேயே கிடைக்கிறது. ஜாதகத்தில் உள்ள எல்லா தோஷங்களையும் பித்ரு பு+ர்வபுண்ணிய ஸ்தானத்தின் காவல் தெய்வங்களான உங்கள் குல தெய்வம் தீர்க்கும்.

💥 ஒருவரின் சந்தோஷமான சுபிட்சமான வாழ்க்கைக்கு குல தெய்வ ஆராதனையும், பித்ருக்களின் ஆசியும் மிக முக்கியம். குல தெய்வத்தை யார் ஒருவர் விடாமல் தொடர்ந்து வழிபாடு செய்கிறார்களோ, அவர்கள் வேண்டும் வரம் எல்லாம் கிடைக்கும்.

💥 ஒருவர் எவ்வளவு பூஜைகள் செய்தாலும் எத்தனை பரிகாரங்கள் செய்தாலும் குலதெய்வ அனுக்கிரகம் இல்லை என்றால், எந்த தெய்வ அனுக்கிரகமும் இல்லை என்றும், குல தெய்வ வழிபாடு கோடி தெய்வ வழிபாடு என்றும் சொல்லப்படுகிறது.

💥 பல தெய்வங்களை வழிபாடு செய்து வரலாம். ஆனால் அந்த தெய்வங்கள், குலதெய்வங்கள் ஆகாது. அவை இஷ்ட தெய்வங்கள் அல்லது இஷ்ட தேவதைகள் எனப்படும். இஷ்ட தெய்வமும் குலதெய்வத்திற்கு அடுத்ததுதான். மற்ற தெய்வங்களும் குலதெய்வத்தின் அனுமதி பெற்றே அருளினை வழங்க முடியும்.

💥 உங்கள் குல தெய்வத்தின் கோவிலுக்கு அடிக்கடி இயன்றபோது செல்லுங்கள். அடிக்கடி செல்ல முடியாதவர்கள் உங்கள் வீட்டிலேயே குல தெய்வபடத்தை அலங்கரித்து, பாரம்பரிய, வழக்கமான படையலை வைத்து மனம் உருக வழிபாடு செய்யலாம்.

💥 பெண்கள் மட்டும் இரண்டு குலதெய்வங்களை வணங்குகிறார்கள். திருமணத்திற்கு முன் பிறந்த வீட்டின் குலதெய்வத்தை வணங்குபவர்கள் மற்றும் திருமணம் முடிந்தவுடன் கணவரின் வீட்டில் உள்ள குலதெய்வத்தை வணங்க ஆரம்பிக்கிறார்கள். பிறகு பிறந்த வீட்டின் குலதெய்வத்தை வணங்குவது கிடையாது. ஆனால் பிறந்த வீட்டின் குலதெய்வத்திற்கு வருடத்திற்கு ஒரு முறை வழிபாடு செய்து வந்தால் புகுந்த வீட்டில் எந்த பிரச்சனையையும் சமாளிக்ககூடிய ஆற்றல் கிடைக்கும்.

இஷ்ட தெய்வமும், குலதெய்வமும் : 💥 நாம் வணங்கும் இஷ்ட தெய்வம் சக்தி வாய்ந்த தெய்வமாக இருந்தாலும், முதலில் குலதெய்வத்தையே வணங்க வேண்டும். ஒரு வேலை அந்த குடும்பத்திற்கு குலதெய்வ தோஷம் இருந்தால், மற்ற தெய்வங்களின் அருள் கிடைப்பதில்லை.

💥 குலதெய்வத்தின் அனுக்கிரகம் இல்லை என்றால் ஒருவர் என்னதான் சக்தி வாய்ந்த ஹோமம், யாகம் செய்தாலும், ஆலயங்களுக்கு சென்றாலும் எதிர்பார்த்த பலன் கிடைக்காது. குலதெய்வத்தின் ஆசி இல்லையென்றால் முன்னேற்றத்தில் பல தடைகள் ஏற்படும்.

💥 குலதெய்வ வழிபாடு ஒவ்வொரு குடும்பத்துக்கும் அவசியமானதாகும். வருடம் ஒருமுறையாவது குடும்பத்தோடு சென்று குலதெய்வத்துக்குச் செய்யவேண்டியதைச் செய்து வழிபட்டால் குலம் தழைத்து, வரும் சந்ததியினர் சந்தோஷமான வாழ்க்கையை வாழ்வர்.

சந்திர கிரகணம்

⭐ ஹேவிளம்பி ஆண்டு ஆடி மாதம் 22-ம் தேதி திங்கட்கிழமை (7-8-2017) சந்திர கிரகணம் இரவு 10.51 மணிக்கு ஆரம்பித்து, இரவு 12.49 மணிக்கு விடுகிறது.

⭐ சூரியன் பூமி சந்திரன் மூன்றும் ஒரே நேர்க்கோட்டில் வரும் போது கிரகணங்கள் ஏற்படுகின்றன. இதில் சந்திரன் மறைக்கப்படும் போது சந்திரகிரகணமும், சூரியன் மறைக்கப்படும்போது சூரியகிரகணமும் நிகழ்கிறது.

⭐ பௌர்ணமி தினத்தன்று சந்திர கிரகணமும், அமாவசை தினத்தன்று சூரிய கிரகணமும் நடக்கும்.

⭐ சந்திர கிரகணம் என்பது நிலா பூமியின் பின்னால் கடந்து செல்லும் போது, பூமியானது சூரியனின் கதிர்களை நிலவின் மீது படுவதிலிருந்து மறைத்துவிடுவதால் ஏற்படுவது ஆகும்.

⭐ சந்திர கிரகணம் முழுமையாக ஏற்பட்டால் பூரண சந்திர கிரகணம் என்றும், அரைகுறையாக ஏற்பட்டால் பார்சுவ சந்திர கிரகணம் என்றும் அழைக்கப்படுகிறது. சூரிய, சந்திரர்கள் கிரகணம் நிகழும் பொழுது ராகுவின் பிடியில் இருந்தால் ராகு கிரகஸ்தம் என்றும், கேதுவின் பிடியில் இருந்தால் கேது கிரகஸ்தம் என்றும் அழைக்கப்படுகிறது.

⭐ கிரகணம் எல்லா நாடுகளுக்கும் ஒரே நேரத்தில் தென்படாது. மாறாக வெவ்வேறு நேரங்களிலேயே தென்படும். கிரகணத்தின் போது புவி மேற்பரப்பில் வெளிச்சம் குறைவதை காணலாம்.

சந்திர கிரகணம் பற்றி புராணக் கதை :

⭐ சந்திரன் அவர் செய்த பாவ காரணத்தால் அவருக்கு ராகு தோஷம் வந்துவிடுகிறது. இதனால் ராகு (பாம்பு) அவரை பிடித்து அவரை முடமாக்க நினைக்கிறார்.

⭐ ஆனால் சந்திரன், பகவானை பிரார்த்தித்து, ஸ்லோகங்கள் சொல்லவும், இறைவன் சந்திரனுக்கு அருள, சந்திரனுக்கு இருந்த ராகுதோஷம் நீங்குகிறது.

⭐ இதனால் கிரகணத்தின் போது பக்தியுடன் இறைவனை பிரார்த்தித்து வந்தால் அவரவர் செய்த பாவங்கள் தீரும். இறைவன் அருளும் கிடைக்கும்.

⭐ கிரகண காலத்தில் கர்ப்பிணி பெண்கள் வெளியே வரக்கூடாது. இது பீடை காலம் என புராணங்கள் கூறுகிறது. ஆனால் சந்திரனின் கதிர்களின் கதிர்வீச்சில் ஏற்படும் மாற்றம் கர்ப்பிணி பெண்களை பாதிக்கும் என்பதால் கர்ப்பிணி பெண்களுக்கு பாதிப்பு ஏற்படும் என கூறப்படுகிறது. கிரகணம் அன்று என்ன செய்யலாம்? என்ன செய்யக்கூடாது?

⭐ கிரகணம் தொடங்குவதற்கு 2 மணி நேரத்திற்கு முன்னதாகவே எந்த வித உணவும் உட்கொள்ள கூடாது.

⭐ கர்ப்பிணி பெண்கள் வீட்டை விட்டு வெளியே போகக் கூடாது.

⭐ ஆலயங்கள் அனைத்தும் மூடி இருக்க வேண்டும். கிரகண நேரத்தில் ஆலய தரிசனம் கூடாது.

⭐ செய்து வைத்திருக்கும் உணவுகளில் தர்ப்பை புல்லினை போட்டு வைக்க வேண்டும்.

⭐ கிரகணத்தின் போது நவகிரக துதியை பாராயணம் செய்யலாம். அதுபோலவே சந்திர கிரகணத்துக்கான துதியையும் பாராயணம் செய்யலாம்.

⭐ கிரகண விமோசன காலத்தில் அதாவது கிரகணம் முழுதும் முடிந்ததும் ஸ்நானம் செய்துவிட்டு ஆலய தரிசனம் மேற்கொள்ள வேண்டும்.

⭐ ஆலய தரிசனம் செய்துவிட்டு தீபம் ஏற்றி வழிபட்டால் கடன் தொல்லையில் இருந்து விடுபடலாம்.

⭐ கிரகணம் முடிந்ததும், பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்வது நல்லது. ஆலய தரிசனம் மேற்கொண்ட பிறகே உணவு உட்கொள்ள வேண்டும்.

⭐ சந்திர கிரகண காலத்தில் வீட்டில் இருந்தபடியே இறைவனை துதித்து, இறை பாடல்களை பாராயணம் செய்வது நல்ல பலன்களை கொடுக்கும். கிரகணம் முடிந்ததும், ஆலய வழிபாடு செய்வது இன்னும் சிறப்புகளை கொடுக்கும்.

எந்த கிழமையில் வரும் பிரதோஷ நாளில் நந்தியை வணங்குவதால் என்ன பலன்?


🌀 பிரதான தோஷங்களை நீக்குவதுதான் பிரதோஷ வழிபாட்டின் முக்கிய சிறப்பு. யார் ஒருவரது ஜாதகத்தை எடுத்துக் கொண்டாலும் அதில் குறைந்தது 4 தோஷங்களாவது இருக்கும். எத்தனை தோஷங்கள் இருந்தாலும், பிரதோஷ தினத்தில் சிவனையும், நந்தியையும் வழிபடுவதன் மூலம் பயன்பெறலாம்.

🌀 பிரதோஷ நேரம் மாலை 4.30 மணி முதல் 6.00 மணிவரை உள்ள காலம். வளர்பிறை, தேய்பிறை என்ற இரண்டு பட்சங்களிலும் வரும் திரயோதசி திதியன்று பிரதோஷ வழிபாடு நடைபெறுகிறது. சிவனையும், நந்தி பகவானையும் எந்தக் கிழமை வரும் பிரதோஷத்தில் வழிபட்டால் என்ன பலன் கிடைக்கும் என்று பார்ப்போம்.

🌀 ஞாயிற்றுக்கிழமையில் வரும் பிரதோஷத்தில் நந்தி வழிபாடு செய்தால் திருமணத்தடை விலகி திருமணம் நடைபெறும். மங்களகரமான நிகழ்ச்சிகள் இல்லத்தில் நடைபெறும்.

🌀 திங்கட்கிழமையில் வரும் பிரதோஷ நாட்களில் நந்தியை வழிபட்டு வந்தால் மனதில் உள்ள குழப்பங்கள் நீங்கி மன அமைதி கிடைக்கும். நல்ல எண்ணங்கள் மேலோங்கும்.

🌀 செவ்வாய்க்கிழமையில் வரும் பிரதோஷ நாட்களில் சிவபெருமானையும் நந்தி தேவரையும் வழிபட்டு வந்தால் பஞ்சம் அகலும். நோய் நொடிகளற்ற வாழ்வு கிடைக்கும். நல்ல உத்தியோகமும், உயர் பதவியும் கிடைக்கும்.

🌀 புதன் கிழமையில் வரும் பிரதோஷ நாட்களில் நந்தியை வழிபட்டு வந்தால் புத்திர பாக்கியம் கிட்டும்.

🌀 வியாழக்கிழமைகளில் வரும் பிரதோஷ நாட்களில் நந்தி பகவானை வழிபட்டு வந்தால் கல்வித் தடை நீங்கும். புத்திக்கூர்மை அதிகரிக்கும். நல்ல எதிர்காலம் அமையும்.

🌀 வெள்ளிக் கிழமைகளில் வரும் பிரதோஷ காலங்களில் சிவபெருமானை வழிபட்டு வந்தால் எதிரிகள் தொல்லை நீங்கும். இல்லத்தில் மகிழ்ச்சி நிலைத்திருக்கும்.

🌀 பிரதோஷ நாட்களில் மிகவும் முக்கியமாக கருதப்படும் நாள் சனிப்பிரதோஷம் ஆகும். சனிப்பிரதோஷம் அன்று சிவபெருமானையும், நந்தி தேவரையும் வழிபட்டால் சகல சௌபாக்கியங்களும் கிடைக்கும். அனைத்து கிழமைகளில் வரும் பிரதோஷ நாட்களிலும் சென்று வழிபட்டால் நல்ல வாழ்க்கை அமையும்.

சிவ வழிபாடு!

 
🌟 முதற்கடவுள்களில் ஒருவரான சிவனின் வடிவத்தில் மிக முக்கியமானது லிங்க வழிபாடு ஆகும். பொதுவாக கடவுள் வழிபாட்டின்போது மலர்கள் இன்றியாமையாததாக உள்ளது. சிவன் வழிபாட்டில் எந்த மாதங்களில் எந்த மலர்களால் பூஜை செய்யலாம் என்று பார்ப்போம். சிவ பூஜைக்கான மாதங்களும், மலர்களும் !

🌟 சித்திரை - பலாசம்
🌟 வைகாசி - புன்னை
🌟 ஆனி - வெள்ளெருக்க
🌟 ஆடி - அரளி
🌟 ஆவணி - செண்பகம்
🌟 புரட்டாசி - கொன்றை
🌟 ஐப்பசி - தும்பை
🌟 கார்த்திகை - கத்திரி
🌟 மார்கழி - பட்டி
🌟 தை - தாமரை
🌟 மாசி - நீலோத்பலம்
🌟 பங்குனி - மல்லிகை

அதேபோல் ஒவ்வொரு மாத பவுர்ணமிகளில் பின்வரும் பூக்களை கொண்டு வழிபாடு செய்தால் அனைத்து விருப்பங்களையும் அடையலாம்.

🌟 சித்திரை - மரிக்கொழுந்து
🌟 வைகாசி - சந்தனம்
🌟 ஆனி - முக்கனிகள்
🌟 ஆடி - பால்
🌟 ஆவணி - நாட்டுச்சர்க்கரை
🌟 புரட்டாசி - அப்பம்
🌟 ஐப்பசி - அன்னம்
🌟 கார்த்திகை - தீபவரிசை
🌟 மார்கழி - நெய்
🌟 தை - கருப்பஞ்சாறு
🌟 மாசி - நெய்யில் நனைந்த கம்பளம் 🌟 பங்குனி - கெட்டித்தயிர் இதை செய்து சிவ பெருமானை வழிபட்டால் எல்லா செல்வ வளங்களையும் பெற்று நிம்மதியாக வாழலாம். இலவச நாட்காட்டியை.

🏠வலம்புரிச் சங்கை வீட்டில் வைத்து வழிபடலாமா?

  🌺 நம் வீட்டில் உள்ள பூஜை அறையில் தெய்வ படங்களை வைத்து வழிபடுவது மட்டுமல்லாமல் வீட்டினுள் நுழைய இருக்கும் தீய அதிர்வுகளை கட்டுப்படுத்த சில தெய்வீகமான பொருட்களையும் வைத்து வணங்குகின்றனர். அதேபோல் வீட்டில் வலம்புரி சங்கை வைத்து வழிபடலாமா என்று பார்ப்போம்.

🌺 தேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக் கடைந்த போது பதினாறுவகை தெய்வீகப் பொருட்கள் வெளிவந்தன. அவற்றுள் வலம்புரிச் சங்கும் ஒன்றாகும். வலம்புரிச்சங்கு இருக்குமிடம் மஹhலட்சுமியின் இருப்பிடமாக கருதப்படுகின்றது. நம் வீட்டில் இதனை வைத்து வழிபட்டால் வீட்டில் ஐஸ்வர்யம் பெருகும். குடும்பத்தில் மன அமைதி, மகிழ்ச்சி நிலைத்திருக்கும்.

🌺 வலம்புரிச் சங்கினை வியாபார ஸ்தலங்களில் வைத்து வழிபட்டால் தொழிலில் வெற்றியும், மேன்மையும் உண்டாகும். இச்சங்கினை வீட்டில் வைத்து வழிபட்டால் பணப்புழக்கம் தாராளமாக இருக்கும்.

🌺 தெய்வத்திற்கு வலம்புரிச்சங்கினால் அபிஷேகம் செய்தால் பத்து மடங்கு பலன் கிடைக்கும். வலம்புரிச் சங்கை முறைப்படி இல்லத்தில் வைத்து பூஜித்து வந்தால் செல்வச் செழிப்பு ஏற்படும்.

🌺 நம் வீட்டில் வலம்புரி சங்கில் தண்ணீர் நிரப்பி அதில் துளசி இலை இட்டு அந்த தீர்த்தத்தை வெள்ளிக்கிழமைகளில் இல்லத்தில் தௌpத்தால் வாஸ்து தோஷம் நீங்கும். வலம்புரிச் சங்கு பூஜிக்கப்பட்டு வரும் இல்லங்களில், பிரம்மஹத்தி முதலான அனைத்துவகை தோஷங்களும் அகன்றுவிடும்.

🌺 செவ்வாய்தோஷத்தால் அவதிப்படும் பெண்கள் செவ்வாய் கிழமைகளில் இந்த சங்கில் பால் நிரப்பி செவ்வாய் கிரக பூஜை செய்தால் தோஷம் நீங்கி திருமணம் நடக்கும்.

🌺 கடன் பிரச்சனையில் இருப்பவர்கள் சங்குக்கு குங்கும அர்ச்சனை செய்தால் கடன் விலகும். வீட்டில் வலம்புரி சங்கை எப்படி வைப்பது ?

🌺 சங்கை எப்பொழுதும் வெறும் தரையில் வைக்கக் கூடாது. தட்டு அல்லது வாழை இலையில் வைக்க வேண்டும். அதன் மீது பச்சை அரிசி அல்லது நெல் பரப்ப வேண்டும்.

🌺 சங்கு வடக்கு அல்லது தெற்கு முகமாக இருக்க வேண்டும்.

🌺 சங்கில் தண்ணிர் வைத்து துளசி அல்லது பூக்கள் வைக்கலாம். பணம், நாணயங்கள், தங்கம் அல்லது நவரத்தினங்கள் வைக்கலாம். 

மரத்தடியில் தெய்வங்கள் இருப்பது ஏன்?

🌴அரசமரம், வேப்பமரம் இரண்டுக்கும் கீழே விநாயகர் மற்றும் நாகர் சிலைகளைப் பிரதிஷ்டை செய்வது வழக்கமாக இருக்கிறது. இதன் ரகசியம் என்ன தெரியுமா?

🐘விநாயகருக்கு துதிக்கையுடன் சேர்த்து ஐந்து கரங்கள் உண்டு. துதிக்கையில் புனித நீர்க்குடம் வைத்துள்ளார். பின் வலது கையில் அங்குசம், இடது கையில் பாசக் கயிறு, முன் பக்கத்து வலது கையில் ஒடித்த தந்தம், இடது கையில் அமிர்தகலசமாகிய மோகதம் ஆகியவை காணப்படும்.

🐘 அங்குசம் யானையை அடக்க உதவும் கருவியாகும். விநாயகரது அங்குசமோ மனம் என்ற யானையைக் கட்டிப் போடும் வல்லமை படைத்தது. அதனால் தான் அவரது முகம் யானை வடிவில் இருக்கிறது. அவர் பாசக்கயிறு கொண்டு தன் பக்தர்களின் எதிரிகளை கட்டிப் போடுகிறார்.

🌙ஒடிந்த தந்தம் கொண்டு பாரதம் எழுதுகிறார். இது மனிதன் முழுமையான கல்வியை பெற வேண்டும் என்பதை குறிக்கிறது. இடது கையில் மோதகம் வைத்துள்ளார். சாதாரண மோதகம் அல்ல இது. உலகமும் உருண்டை, இந்த மோதகமும் உருண்டை. உலகத்துக்குள் சகல உயிர்களும் அடக்கம் என்பது போல, தனக்குள் சகல உயிர்களும் அடக்கம் என்பதையே இது காட்டுகிறது.

➦ இதே போல், அரச மரத்தடியில் விநாயகர் தவறாது இடம்பெற்றிருப்பார்.

➥ இது ஏன் தெரியுமா? அரசமரத்தடி நிழல் படிந்த நீரில் குளிப்பது உடல் நலத்திற்கு நல்லது. பெண்கள் அரச மரத்தைச் சுற்றி வரும்போது கிடைக்கும் காற்று, பெண்களின் கர்ப்பப்பை குறைபாடுகளை நீக்கும் சக்தி கொண்டது.

➦ எனவே கிராமங்களில் குளத்தங்கரையில் உள்ள அரச மரத்தடியில் பிள்ளையார் வைத்திருக்கிறார்கள். கிராமத்தில் இருப்பவர்களும் குளத்தில் குளித்து விட்டு அரசமரத்தைச் சுற்றிப் பிள்ளையாரை வணங்கிச் செல்கின்றார்கள்.

➥ அரசமரம், வேப்பமரம் இரண்டுக்கும் கீழே விநாயகர் மற்றும் நாகர் சிலைகளைப் பிரதிஷ்டை செய்வது மழை பெய்தாலும், நல்ல வெயில் அடித்தாலும் குடை தேவைப்படுகிறது. பனிக்காலத்தில் இளவெயிலாக இருக்கும். அப்போது குடை தேவையில்லை. அரசமரத்திலும், வேப்பமரத்திலும் மழை மற்றும் கோடை காலத்தில் இலைகள் நெருக்கமாக இருக்கும். தன் கீழே பிரதிஷ்டை செய்யப்படும் பிள்ளையாரையும், நாகராஜாவையும் அவை குடை போல இலைகளை விரித்து பாதுகாப்பதாக ஐதீகம். இயற்கையும் இறைவனை வணங்குகிறது என்பது இதன் ரகசியம்.

🍂 பனிக்காலத்தில் மரங்கள் இலைகளை உதிர்த்து விட்டு கட்டைகளுடன் நிற்கும். இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி, சூரியன் தன் கதிர்களை இந்த இடைவெளி வழியே பாய்ச்சி, விநாயகரையும், நாகரையும் வழிபடுவான். அதுமட்டுமல்ல! வெயில், மழை காலத்தில் மரத்துக்கு கீழே மனிதர்கள் ஒதுங்குவார்கள்.

☔ அப்போது அவர்கள் மழை, வெயிலில் இருந்து பெருமளவு பாதுகாக்கப்படுவார்கள். பனிக்காலத்தில் இளவெயில் பட்டால்தான் உடலுக்கு உஷ்ணம் கிடைக்கும். இப்படி, சீதோஷ்ண நிலையால் மனிதன் கஷ்டப்பட்டு விடக்கூடாது என்ற கருணையுடன், தெய்வங்கள் மரத்தடிகளை தங்கள் இருப்பிடமாக்கிக் கொண்டுள்ளனர்.

வீட்டில் எந்த இடங்களில் தீபம் ஏற்றினால் என்ன பலன் கிடைக்கும்?

🌾 தீப வழிபாடு என்பது நம் கலாச்சாரத்துடன் இரண்டரக் கலந்தது ஆகும். நாம் வசிக்கும் வீட்டில் தினமும் காலை, மாலை இரண்டு வேளைகளிலும் தீபம் ஏற்றிவைத்து, அந்த தீபத்தை நமஸ்காரம் செய்தால், தீய சக்திகள் யாவும் விலகி, வீட்டில் லட்சுமி கடாட்சம் பெருகும் என்கின்றன ஞான நூல்கள்.

🌾 மேலும் வீட்டில் தீபம் ஏற்றி வைத்து வழிபடுவதால் சுபம், ஆரோக்கியம், நன்மை, தன வரவு அதிகரித்தல், நல்லபுத்தி ஆகியவை பெருகும். தீபங்களுக்கு என்று ஒரு வழிபாடு பின்பற்றப்பட்டு வருகிறது. அதாவது தமிழ் மாதத்தில் தீபத்தை சிறப்பிக்கும் மாதம் திருக்கார்த்திகை ஆகும். இந்த திருக்கார்த்திகை மாதத்தில் இல்லத்தில் திரு விளக்கேற்றி வழிபடுவது மிகவும் விஷேசமாகும்.

தீபம் ஏற்ற வேண்டிய இடங்களும், விளக்குகளும் :

கோலமிடப்பட்ட வாசலில் : ஐந்து
💡விளக்குகள் தின்ணைகளில் : நான்கு 💡விளக்குகள் மாடக்குழிகளில் : இரண்டு
💡விளக்குகள் நிலைப்படியில் : இரண்டு
💡 விளக்குகள் நடைகளில் : இரண்டு 💡விளக்குகள் முற்றத்தில் : நான்கு
💡விளக்குகள் பூஜையறையில் : இரண்டு

💡கார்த்திகை விளக்குகள் ஏற்றி வைத்து வணங்கினால் சர்வ மங்கலங்கள் உண்டாகும்.

💡 சமையல் அறையில் : ஒரு விளக்கு ஏற்றி வைத்து வணங்கினால் அன்ன தோஷம் ஏற்படாது.

💡 தோட்டம் முதலான வெளிப்பகுதிகளில் : எமனை வேண்டி தீபம் ஏற்ற வேண்டும். இதனால் மரண பயம் நீங்கும். ஆயுள்விருத்தி உண்டாகும்.

🍀 தீபத்தின் வகைகள் : தீபத்தில் மகாலட்சுமி வசிப்பதால், தீபம் ஏற்றியதும் தீபலட்சுமியே நமோ நம என்று கூறி வணங்குவது அவசியம்.

🌸தீபத்தை பலவகைகள் உண்டு. அவை
🌟சித்ர தீபம் : வீட்டின் தரையில் வண்ணப் பொடிகளால் சித்திரக் கோலம் இட்டு, அதன்மீது ஏற்றப்படும் தீபம் சித்ர தீபம் ஆகும்.

🌟 மாலா தீபம் : அடுக்கடுக்கான தீபத் தட்டுகளில் ஏற்றப்படும் தீபம் மாலா தீபம் ஆகும்.

🌟ஆகாச தீபம் : வீட்டின் வெளிப்புறத்தில் உயர்ந்த பகுதியில் ஏற்றிவைக்கப்படும் தீபம் ஆகாச தீபமாகும். கார்த்திகை மாதம் சதுர்த்தி திதிநாளில் இந்த தீபத்தை ஏற்றி வழிபட்டால், எம பயம் நீங்கும்.

🌟ஜல தீபம் : தீபத்தை ஏற்றி நதி நீரில் மிதக்கவிடப்படும் தீபத்திற்கு ஜல தீபம் என்று பெயர்.

🌟படகு தீபம் : கங்கை நதியில் மாலைவேளையில் வாழை மட்டையின் மீது தீபம் ஏற்றிவைத்தும், படகு வடிவங்களில் தீபங்கள் ஏற்றி வைத்தும் கங்கையில் மிதக்கவிடுவதற்கு பெயர் படகு தீபம் ஆகும்.

🌟சர்வ தீபம் : வீட்டின் அனைத்து பாகங்களிலும் வரிசையாக ஏற்றிவைக்கப்படுபவை சர்வ தீபமாகும்.

🌟மோட்ச தீபம் : முன்னோர் நற்கதியடையும் பொருட்டு, கோயில் கோபுரங்களின் மீது ஏற்றி வைக்கப்படும் தீபம் மோட்ச தீபம் ஆகும்.

🌟சர்வாலய தீபம் : கார்த்திகை மாதம் பௌர்ணமி அன்று, மாலைவேளையில் சிவன்கோயில்களில் ஏற்றப்படுவது சர்வாலய தீபமாகும்.

🌟அகண்ட தீபம் : மலையுச்சியில் பெரிய கொப்பரையில் ஏற்றப்படுவது அகண்ட தீபம் ஆகும்.

🌟லட்ச தீபம் : ஒரு லட்சம் விளக்குகளால் கோயிலை அலங்கரிப்பது லட்சதீபமாகும்.

🌟மாவிளக்கு தீபம் : அரிசி மாவில் வெல்லம் போட்டு, இளநீர் விட்டுப் பிசைந்து உருண்டையாக்கி, நடுவில் குழித்து நெய் ஊற்றி திரிபோட்டு ஏற்றுவது மாவிளக்கு தீபம் ஆகும்.

சடாரி வைப்பதன் தத்துவம்!..

சடாரி அல்லது சடகோபம் என்பது திருமாலின் திருப்பாதம் பொறிக்கப்பெற்ற கிரீடமாகும். இந்த சடாரி வைணவ கோவில்களில் இறை தரிசனத்திற்கு பிறகு, பெருமாளின் திருவடிகளாக பாவித்து, பக்தர்களின் தலையில் வைத்து எடுக்கப்படுகிறது. பெருமாள் கோவில்களில் பக்தர்களின் தலையில் சடாரி வைப்பார்கள்.

தந்தையின் வார்த்தைகளைக் காப்பாற்ற, மரவுரி தரித்து வனவாசம் சென்றார் ஸ்ரீராமன். அப்போது பிரிய மனமில்லாத தன் மனைவி மற்றும் லட்சுமணன் உடன் சென்றனர். தசரதன், தான் கைகேயிக்குக் கொடுத்த இரண்டு வரங்களைக் காப்பதற்காகத் தன் உயிரினும் மேலான ராமனை கானகம் அனுப்பினான். இதை அறிந்த பரதன், தன் தமையன் வனம் சென்றதற்குத் தானும் காரணமாக ஆகிவிட்டதை எண்ணி வருந்தினான்.

அயோத்தியை ஆள்வதற்கு தமையனுக்கே உரிமை உள்ளது என்றும், தனக்கு அரியாசனம் ஏற்க விருப்பம் இல்லை என்றும் கூறி, தன் பரிவாரங்களுடன் காட்டுக்கு வந்து அயோத்தியின் சிம்மாசனத்தை ஏற்க வேண்டும் என்று பிரார்த்தித்தான். ஆனால், பரதனின் வேண்டுகோளை மறுத்த ராமபிரான், பரதன் சொல்வதுபோல் தான் அரசுப் பொறுப்பை ஏற்றுக்கொண்டால், தந்தைக்குக் கொடுத்த வாக்கை மீறியதுபோல் ஆகும் என்று மறுத்துவிட்டார்.

அதே நேரம், பரதனுக்கும் நாட்டை ஆள்வதில் விருப்பம் இல்லை. சிக்கலான இந்த நிலைக்கு ஒரு தீர்வாகத்தான், பரதன் ராமபிரானின் பாதுகைகளைப் பெற்றான். தன் தலைமீது வைத்து அயோத்தி எல்லையில் இருந்த நந்திகிராமத்துக்கு வந்தான். ராமன் துறந்த திருமுடியை சிம்மாசனத்தின் மீது வைத்தான். அதன் மேல் ராமபிரானின் திருவடியை வைத்து பட்டாபிஷேகம் செய்து, ராமபிரானின் சேவகனாக ஆட்சிசெய்து வந்தான். அந்த தருணத்தில் அனைவருக்கும் இயல்பாக தோன்றும் சந்தேகமானது பரதன் பாதுகைகளை அரியணையின் மீது நேரடியாக வைக்காமல், அவரின் திருமுடியை வைத்து அதன்மேல்தான் திருவடிகளை வைத்தான். இது எப்படிச் சரியாகும்? என்ற கேள்வி எழுவது எல்லோருக்கும் இயல்புதான்.

இந்தக் கேள்விக்குப் பதிலளிப்பது போல் ஒருமுறை வைகுண்டத்தில் மகாவிஷ்ணு சயனம் கொள்வதற்காகச் சென்றார். எப்போதும் இல்லாத வழக்கமாக, அவர் தன் பாதுகைகளுடனேயே ஆதிசேஷன் மீது சயனம் கொண்டார். அந்தச் சமயம் முனிவர்கள் வந்திருக்கும் செய்தியைக் கேட்டு, அவர்களைக் காண தன் பாதுகைகளை ஆதிசேஷன் மீது வைத்துச் சென்றார். அவர் சென்றவுடன் ஆதிசேஷன் மீது இருந்த திருமுடியும், சங்கும், சக்கரமும் அந்த பாதுகைகளைத் தூற்றத் தொடங்கின. பகவானின் திருமுடியை அலங்கரிக்கும் நான் இருக்கும் இடத்தில் நீ எப்படி இருக்கலாம்?, பாதங்களை அலங்கரிக்கும் நீ ஆதிசேஷன் மீது அமர்வதற்கு அருகதை அற்றவன் என்றெல்லாம் கூறின. இன்னும் கடினமான வார்த்தைகளால் தூற்றவும் தொடங்கின. எவ்வளவுதான் பொறுத்துக்கொள்வது? ஒரு கட்டத்தில் கோபம்கொண்ட பாதுகைகள், பகவானை தரிசிக்கவரும் ரிஷிகளும், முனிவர்களும் என்னையே வணங்குகின்றனர்.

நீங்கள் அவரது கரத்தில் இருந்தாலும் உங்களை யாரும் வணங்குவதில்லை என்று கூறின. ஆனாலும், அவை மூன்றும் விடுவதாக இல்லை. கௌரவத்தால் உயர்ந்த நாங்கள் இருக்கும் இடத்தில் நீ இருக்கக் கூடாது என்று கூறின. இதைக் கேட்டு மனம் நொந்த பாதுகைகள் விஷ்ணுவிடம் முறையிட்டன. எனது பார்வையில் எல்லாம் ஒன்றேயாகும். இதை அறியாத சங்கும், சக்கரமும், திருமுடியும் இதற்கான பலனை ஒருநாள் அனுபவிக்கும் என்று கூறினார். இதன் பலனாகவே திரேதா யுகத்தில் ஸ்ரீராமாவதாரத்தில் சங்கும் சக்கரமும் பரத, சத்துருக்ணனாகப் பிறந்தன. பாதுகைகளை இழிவுபடுத்திய அவை, தமது இந்தப் பிறப்பில் பாதுகைகளைத் தம் தலையில் சுமந்துசென்றன. மேலும், அந்தப் பாதுகைகளை திருமுடி மீது வைத்ததற்கு இதுவே காரணமாக அமைந்தது.

இந்தச் சம்பவத்தை நமக்கு நினைவுபடுத்தவே பெருமாள் கோவில்களில் நமக்கு சடாரி வைக்கப்படுகிறது. இறைவனுக்கு முன்னே அனைவரும் ஒன்றே. அவன் சந்நிதியில் பணக்காரன் - ஏழை, உயர்ந்த ஜாதி - தாழ்ந்த ஜாதி என்ற பாகுபாடுகள் இல்லை என்ற தத்துவத்தை நமக்கு உணர்த்தவே இப்படி சடாரி வைக்கப்படுகிறது.