✾ சைவம், வைணவம் என்று கூறுவது போல், கிரகங்களிலும் சைவம், வைணவம் என்றெல்லாம் உண்டு. சூரியன், சனி, செவ்வாய், குரு ஆகியவை சிவ கோத்திரம். சனியை இரண்டு பக்கத்திலும் வைக்கலாம். செவ்வாய், குரு, சூரியன் ஆகிய மூன்றும் சைவக் கிரகங்கள், சைவக் கடவுள்கள் ஆகும். செவ்வாய் - முருகன், குரு - தட்சிணாமூர்த்தி, சூரியன் சிவனுக்குரியவர்கள். இந்த ஆதிக்கம் உடையவர்கள் எல்லாம் ருத்ராட்சம் அணிந்தால் பிரம்மாண்டமாக முன்னுக்கு வருவார்கள்.
✾ இல்லறத்துக்கும் ருத்ராட்சத்துக்கும் சம்பந்தமில்லை. சிவபூஜை செய்யும் அனைவருமே ருத்ராட்ச மாலை அணியலாம். இல்லறத்துக்கு ஒரு மாலை, துறவறத்துக்கு ஒரு மாலை என்பது கிடையாது. துறவிகள் இதை தவிர வேறு மாலைகள் போட்டுக் கொள்ள மாட்டார்கள். இல்லறத்தில் இருந்து கொண்டே ருத்ராட்ச மாலை போட்டுக் கொள்ளலாம். தவறு ஒன்றும் இல்லை. அதே சமயத்தில் தர்ம - நியாயங்களுக்கு மதிப்பு கொடுத்து நடந்து கொள்ள வேண்டும். ருத்ராட்ச மாலையின் பெருமை ஆனது ஒவ்வொரு முக ருத்ராட்சத்துக்கும் ஒரு தேவதை மற்றும் தோஷம் விலக்கும் தன்மை உண்டு.
✾ ருத்ராட்சத்தை அணிந்து குளிக்கும்போது ருத்ராட்சத்தில் பட்ட நீர் நம்மீது படுவதால் புண்ணிய நதியில் குளித்த புண்ணியம் நமக்குக் கிடைக்கும் என்று சொல்லப்பட்டுள்ளது. தீட்டுக் காலங்களிலும், மல, ஜல விசர்ஜன காலங்களிலும் ருத்ராட்சத்தைக் கழற்றி வைத்துவிட்டு சுத்தமான பின் அணியலாம்.
✾ அதிலேயும் ருத்ராட்சத்திலும் ஒன்று முதல் பல முகங்கள் கொண்ட ருத்ராட்சங்கள் உள்ளன. ஆனால் எல்லா முக ருத்ராட்சங்களும் பலன் அளிக்கக் கூடிய ருத்ராட்சங்களே. அதில் எந்த மாறுபாடும் இல்லை.
✾ ருத்ராட்சத்தில் ஒவ்வொரு முகத்திற்கும் ஏற்றபடி அதில் மருத்துவ குணங்களும், ஆன்மீக குணங்களும் உள்ளன. பல்வேறு நூல்கள் இதைப் பற்றிக் கூறுகின்றன.
✾ ருத்ராட்சத்தை எப்படி வேண்டுமானாலும் அணியலாம். ஆனால் ருத்ராட்சத்தை தனியாக அணியாமல் ஏதாவது ஒரு உலோகத்துடன் சேர்த்து அணிந்தால் அது இல்லற வாழ்க்கையில் இருப்பவர்களுக்கு நல்லது.
✾ அதற்காகத்தான் ருத்ராட்சத்தின் இரு பக்கத்திலும் பூன் போன்று செய்து அதனை நூலில் கட்டித் தொங்க விடுகிறார்கள்.
✾ ஏழரை சனி, அஷ்டமத்து சனி எல்லாம் வந்தாலே பலர் தானே ருத்ராட்சத்தை விரும்பி அணிவதைப் பார்க்கலாம். ஏழரை சனி, அஷ்டமத்து சனி வந்தால் பழமையானவற்றை விரும்புவார்கள். ருத்ராட்சம், யானை தந்தம், யானை முடி மோதிரம் போன்றவற்றை அணிவார்கள்.
✾ மற்றவர்களிடம் இருந்து தன்னை வித்தியாசப்படுத்திக் காட்டுவதற்காக அல்லது அந்தப் பொருளின் மீதுள்ள ஒரு நம்பிக்கையினால் அவ்வாறு செய்வார்கள்.
✾ சனி திசை நடக்கும்போது தன்னம்பிக்கையை விட மற்ற பொருட்களின் மீதுதான் நம்பிக்கை அதிகமாக இருக்கும். அதை அணிந்து கொண்டால் அதனால் நமக்கு நன்மை அளிக்கும் என்றெல்லாம் நினைப்பார்கள்.
✾ சனி ராசி உள்ளவர்களும் ருத்ராட்சத்தை விரும்பி அணிவார்கள். மகரம், கும்ப ராசிக்காரர்கள் ருத்ராட்சத்தை விரும்புவார்கள். ருத்ராட்சத்தை அணியலாம். அதனால் நல்ல பலன்கள்தான் கிட்டும்.
✾ பஞ்சபூதங்களை எதிர்கொள்ளும் சக்தி ருத்ராட்சத்திற்கு உண்டு. பஞ்சபூதங்களின் குறிப்பிட்ட விகிதச் சேர்க்கையே நவக்கிரகங்கள் ஆகும். நவக்கிரகங்களின் செயல்பாடுகளால்தான் ஒருவர் செய்ய கூடிய அனைத்து நல்லது கெட்டதிற்கும் காரணமாக அமைகிறது.
✾ ஒருவருக்கு ருத்ராட்சம் அணியும் எண்ணம் வருவதற்கே அவர் பல பிறவிகளில் புண்ணியம் செய்திருக்க வேண்டும். ருத்ராட்சம் மனித உடலின் அதிக வெப்பத்தை உறிஞ்சக்கூடியது. மனித உடலில் வெப்பம் அதிகரிக்கும் போது வயிற்றில் புண் உருவாகிறது. அதன் அடையாளமாக வாயில் புண் உண்டாகிறது. வயிற்றிற்கும், வாய்க்கும் இடைப்பட்ட கழுத்துப் பகுதியில் கட்டப்படும் ருத்ராட்சம் இந்த அதீத வெப்பத்தை உறிஞ்சி விடுகிறது. தவிர, கண்திருஷ்டியிலிருந்து நம்மைக் காக்கும் சக்தியும் ருத்ராட்சத்திற்கு உண்டு.