நெற்றியில் புருவமத்தியில் மூளையின் முன்புறமாக, பைனீயல் க்ளாண்ட் என்ற சுரப்பி அமைந்துள்ளது. இதை, யோக சாஸ்திரத்தில் ஆக்ஞா சக்ர ஸ்தானம் என குறிப்பிட்டுள்ளனர். மூன்றாவது கண், ஞானக்கண் என்றும் இதற்குப் பெயருண்டு. சிவபெருமானுக்கு ஆக்ஞா சக்கரமே நெற்றிக்கண்ணாக இருப்பதைக் காணலாம். திபெத்தில் லாமாக்கள் ஞானக்கண் திறப்பது என்றொரு சடங்கு செய்கின்றனர். இதன் சிறப்பை உணர்வதற்காகவே நெற்றியில் குங்குமம் இடுகிறோம். பெண்கள் மட்டுமின்றி, ஆண்களும் குங்குமம் வைக்க வேண்டும்.
உடல் முழுவதும் மின்காந்த சக்தி வெளிப்பட்டாலும், நெற்றியில் புருவமத்தியிலுள்ள நுண்ணிய பகுதியில் அதன் சக்தி அதிகமாக வெளிப்படுகிறது. இதன் காரணமாகத்தான், மனக்கஷ்டம் வந்தாலோ, ஏதாவது ஒன்றை தீவிரமாக சிந்தித்தாலோ அந்த இடம் உஷ்ணமடைந்து தலைகனம், தலைவலி போன்ற பிரச்னை உண்டாகிறது.
இதை தவிர்த்து, குளிர்ச்சியை உண்டாக்கவே சந்தனம், குங்குமம் போன்றவற்றை நெற்றியில் இடுகிறோம். இதனால், உடல், மனோசக்தி வீணாகாமல் பாதுகாக்கப்படுகிறது. முகம் களையோடு பிரகாசமாகத் திகழ்கிறது. பொட்டு வைப்பது என்பது அலங்காரத்திற்காகவும், ஆன்மிக காரணத்திற்காகவும் மட்டுமல்ல... ஆரோக்கியத்திற்காகவும் நம் பெரியவர்கள் இப்பழக்கத்தை ஏற்படுத்தினர்.